பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் உதவி விசாரணை அதிகாரி சாட்சியம்
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் உதவி விசாரணை அதிகாரி சாட்சியம் அளித்தாா்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகள் சார்பில் உதவி விசாரணை அதிகாரியான சென்னை தலைமையிட சி.பி.சி.ஐ.டி. முன்னாள் இன்ஸ்பெக்டரும் தற்போது சென்னை மாநில குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வரும் கோமதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியங்களை நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (திங்கட்கிழமைக்கு) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.