ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு
நிலம் கிரையம் செய்வதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி ரோடு பவித்ரா நகரில் வசிப்பவர் அற்புதராஜ் (வயது 74). இவர் தனக்கு பாத்தியப்பட்டது என்று கூறிய நெல்லை பரதர் தெருவில் உள்ள நிலத்தை நெல்லை பேட்டையை சேர்ந்த மகாலிங்கம் (53)என்பவர் ஒரு சென்ட் ரூ.8 லட்சம் என பேசி 2 தவணைகளாக ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்தார். மீதி பணத்தை கொடுத்து கிரயம் செய்ய சொல்லி கேட்ட போது அற்புதராஜா மறுத்ததால் மகாலிங்கம் ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது சம்பந்தப்பட்ட நிலம் அற்புதராஜுக்கு பாத்தியப்பட்டது இல்லை என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மகாலிங்கம் தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது அற்புதராஜ் மற்றும் அவரது மனைவியும் அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மகாலிங்கம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் அற்புதராஜ் மற்றும் அவரது மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.