பீகார் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்


பீகார் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்
x

பீகார் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இந்தியாவிலேயே முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில அரசு. இதன்மூலம் சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பீகார் அரசு வென்றெடுத்திருக்கிறது.

பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36 சதவீதம், பட்டியலினத்தவர் 19.7 சதவீதம், பழங்குடியினர் 1.70 சதவீதம், இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50 சதவீதம் இருப்பதும், சாதிகளைப் பொருத்தவரை யாதவர் சமுதாயம் 14.26 சதவீதம் மக்கள்தொகையுடன் தனிப்பெரும் சாதியாக இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பது குறித்தும் பீகார் அரசு தீர்மானித்து செயல்படுத்தவுள்ளது.

தமிழ்நாட்டில்...

மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை பீகார் ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. அதன்மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இதை பயன்படுத்தி சமூகநீதி தான் தனது தலையாயக் கொள்கை எனக் கூறிவரும் தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசுக்கு சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். 13 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில் ரூ.500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி.

சட்டசபையில் தீர்மானம்...

எனவே, இனியும் தயங்காமல் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தி.மு.க. அரசு உடனடியாக நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் 9-ந் தேதி தொடங்க இருக்கும் சட்டசபையின் துணை பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story