பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பணகுடி:
பணகுடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தை ஆய்வு செய்வதற்காக தேசிய தரச்சான்று வழங்குவதற்கான மத்திய சுகாதார குழுவினர் வந்தனர். இந்த குழுவில் நாக்பூர் கிங்ஸ் வே மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் தீபக் நாம்டியோ டாங்ரே, தெலுங்கானாவை சேர்ந்த ஜெயோட்சனா உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார்கள். நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் நெல்லை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், மாவட்ட தர மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவீன்குமார், வள்ளியூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை (சனிக்கிழமை) வரை தொடர்ந்து ஆய்வு நடைபெற உள்ளது. பின்னர் இந்த குழுவினர் தங்களது ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளனர் அதன்பிறகு பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இங்கு கூடுதல் மருத்துவ வசதிகள் வழங்க வாய்ப்பு உள்ளது.