ஆட்டையாம்பட்டியில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு


ஆட்டையாம்பட்டியில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

மாரியம்மன் கோவில்

சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நடும் விழாவுடன் விழா தொடங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்து வந்தது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடந்தது.

முன்னதாக கோவில் பரம்பரை தர்மகர்த்தா தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.

வண்டி வேடிக்கை நிகழ்ச்சி

இன்று (வியாழக்கிழமை) பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். மாலையில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்கள் பலவிதமான வேடமிட்டு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன், மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அம்சவல்லி (ஆட்டையாம்பட்டி), செந்தில் (ஏற்காடு) உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

தாரமங்கலம்

தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தீர்த்தக்குட ஊர்வலம், முத்துக்குமாரசுவாமி படைக்கோலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் தீ மிதிக்க தொடங்கினர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வணங்கினர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story