மனநிலையை ஒருமுகப்படுத்த செஸ் போட்டி முக்கிய பங்காற்றுகிறது


மனநிலையை ஒருமுகப்படுத்த செஸ் போட்டி முக்கிய பங்காற்றுகிறது
x

மனநிலையை ஒருமுகப்படுத்த செஸ்போட்டி முக்கிய பங்காற்றுகிறது என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

ராணிப்பேட்டை

மனநிலையை ஒருமுகப்படுத்த செஸ்போட்டி முக்கிய பங்காற்றுகிறது என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

பரிசு வழங்கும் விழா

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ், வெற்றிக்கோப்பைகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ், கோப்பை ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கின்ற மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் பள்ளி அளவில் செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது. 8 வட்டாரங்களைச் சேர்ந்த 144 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

போட்டியில் முதல் இடம் பிடித்த அய்யப்பன், ராகவி, ஞானேஸ்வரி, லித்தீஷ்குமார் ஆகியோர் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். இரண்டாம் இடம் பிடித்த தீனா, சித்ரா, மோஹித், நிதிலா ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளை காண செல்கின்றனர்.

முக்கிய பங்காற்றுகிறது

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வெற்றி பெற்ற பிருந்தா, சோபியா, பிரவீன் குமார், வசந்த் ஆகியோர் தமிழக அரசால் நடத்தப்படும் செஸ் பயிற்சி முகாம் மற்றும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். மேலும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளை காணவும் செல்கின்றனர்.

புத்தகத்தில் இருப்பது மட்டுமல்ல கல்வி. எண்ணங்களை சிதறவிடாமல் ஒருமித்த கருத்துடன் ஒரு இலக்கினை அடைய வேண்டும் என்று முழு மூச்சுடன் செயல்பட்டால் உலகில் வெற்றி பெறலாம். அந்த வகையில் செஸ் போட்டியானது மனநிலையை ஒருமுகப்படுத்துவதற்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவது என்பது அவசியம் இல்லை. பொறுமை என்பது மிக முக்கியம். இக்கால கட்டத்தில் நிறைய நபர்களுக்கு பொறுமை என்பது இல்லை. எவ்வாறு பிரச்சினைகளை எதிர்கொள்வது என்ற பக்குவம் நிறைய மனிதர்களிடம் இல்லை. செஸ் போட்டியில் இதையெல்லாம் கற்றுக் கொள்ளலாம். இந்த பயிற்சியினை அனைத்து தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story