பாத்திரத்துக்குள் தலை சிக்கியதால் தவித்த குழந்தை
பாத்திரத்துக்குள் தலை சிக்கியதால் தவித்த குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வாலாஜாபேட்டை காசி விசுவநாதர் கோவில் அருகில் விசாலாட்சி நகர் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ஜோனத். இவர் ராணிப்பேட்டை உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது 1½ வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சில்வர் பாத்திரத்துக்குள் குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அழுது கொண்டு இருந்ததை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் வாலாஜா போலீசார் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சென்று குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.