சேலம் மாசிநாயக்கன்பட்டியில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை பலி-காப்பாற்ற குதித்த தாயும் உயிரிழந்த பரிதாபம்
சேலம் மாசிநாயக்கன்பட்டியில் கிணற்றுக்குள் தவறி விழுந்து குழந்தை பலியானது. காப்பாற்ற குதித்த தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை
சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகர் வாத்தியார் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (வயது 25). இவர்களுக்கு ஒரு வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. வினோத் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 11.15 மணி அளவில் மீனா தனது குழந்தைக்கு தோட்டத்தில் இருந்த கிணறு அருகே நின்றுக் கொண்டு சாப்பாடு கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டாரை இயக்குவதற்காக மீனா குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றார். இந்த நேரத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை சுபஸ்ரீ எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தாள்.
தாயும் குதித்தார்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். வீட்டுக்கு வருவதற்கு காலதாமதம் ஆனதும் மீனாவின் மாமியார் செல்வி தோட்டத்துக்கு சென்றார். அப்போது மீனாவின் செருப்பு ஒன்று கிணற்றுக்கு மேலேயும், மற்றொன்று உள்ளேயும் கிடந்தது. இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம், அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீனா மற்றும் அவரது குழந்தையின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கதறி அழுதனர்
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அங்கு ஏராளமானவர்கள் திரண்டு வந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 1½ மணி நேரம் போராடி முதலில் மீனாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து குழந்தையின் உடலை தேடும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். மதியம் 1.30 மணி அளவில் குழந்தை சுபஸ்ரீயின் உடல் மீட்கப்பட்டது.
பிணமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. மீனா, சுபஸ்ரீயின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலியானதுடன், காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.