மதுரையில் விடுதியில் தங்கிய சினிமா ஒளிப்பதிவாளர் திடீர் சாவு- காரணம் என்ன? போலீசார் விசாரணை
மதுரையில் விடுதியில் தங்கிய சினிமா ஒளிப்பதிவாளர் திடீர் சாவுக்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை திருப்போரூர் நொம்மேலியை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 29). திருமணம் ஆகாத இவர் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். மேலும் மதுரையில் உள்ள குறும்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வந்திருந்த அவர் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார். மேலும் சரத்குமாருக்கு ஏற்கனவே கல்லீரல் பாதிப்பு இருந்தது. அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் அறையில் தங்கியிருந்த சரத்குமார் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது அண்ணன் சதீஷ்குமார் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் உடல் நல பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.