மூடிக்கிடக்கும் கழிப்பிடம்; சுற்றுலா பயணிகள் அவதி
குன்னூர் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பிடத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
குன்னூர்
குன்னூர் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பிடத்தால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பஸ் நிலையம்
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. சமவெளி பகுதியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் குன்னூர் வழியை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் குன்னூர் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.
இதனால் ஊட்டிக்கு செல்லும் வழியில் குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக உள்ளூர் பஸ் நிலையம் கோத்தகிரி சாலையிலும், வெளியூர் பஸ் நிலையம் ஊட்டி சாலையிலும் அமைந்துள்ளது.
கழிப்பிடம்
இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. குறிப்பாக உள்ளூர் பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. அதன்பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நகராட்சி மூலம் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு, அதை தனியார் ஒப்பந்ததாரர் எடுத்து நடத்தி வந்தார்.
அதில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல், சுகாதாரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல், கழிப்பிடத்தை மூடிவிட்டனர்.
திறக்க வேண்டும்
இதன் காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறினார்கள். எனினும் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கழிப்பிடம் மூடி கிடப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.