ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரியில் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள், மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உறவினர்கள், மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவி தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன். அவருடைய மகள் கார்த்திகா ஜோதி (வயது 19). இவர், ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி காலை கார்த்திகா ஜோதி, தான் தங்கியிருந்த விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த விடுதி மற்றும் கல்லூரி ஊழியர்கள், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரித்தனர். குறிப்பாக கல்லூரி முதல்வர் தேன்மொழி, விடுதி காப்பாளர் கவுசல்யா மற்றும் மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள், உடன் பயிலும் மாணவிகள் ஆகியோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திகா ஜோதி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில், தாராபுரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.
சாலை மறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து கார்த்திகா ஜோதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாதர் சங்கத்தினர் மறியல்
இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட மாணவியின் உடலை பார்த்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கண்களை குளமாக்கியது.
மேலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாதர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலை தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.