கல்லூரி பேராசிரியர் காருடன் மாயம்
பாவூர்சத்திரம் அருகே காருடன் மாயமான கல்லூரி பேராசிரியரை கண்டுபிடித்து தருமாறு அவருடைய மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்பிரவின். இவர் கடையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 35). இவர் ஊர் அருகே உள்ள ராமச்சந்திரபட்டினத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். ராமலட்சுமி பாவூர்சத்திரம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
என் கணவர் ஜான்பிரவின் (35), கடையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். என் கணவரின் பெற்றோரும், அவரது சகோதரர் குடும்பமும் அமெரிக்காவில் உள்ளனர். என் கணவர் வேலை செய்யும் கல்லூரியில் இருந்து கடந்த மாதம் 21-ந்தேதி சுற்றுலா சென்று விட்டு 24-ந்தேதி சுற்றுலா முடிந்து என் கணவர் வீட்டிற்கு வந்தார்.
மீண்டும் கல்லூரி சுற்றுலா என்று கூறி 27-ந்தேதி இரவு 11 மணிக்கு என் கணவர் எங்கள் காரில் புறப்பட்டு சென்றார். 28-ந்தேதி காலையில் நான் கல்லூரிக்கு செல்போன் மூலம் சுற்றுலா சம்பந்தமாக தகவல் கேட்டபோது, கல்லூரியில் இருந்து சுற்றுலா யாரும் செல்லவில்லை என்று கூறினர்.
என் கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டேன். அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. என் கணவர் பற்றிய தகவல் கிடைக்காததால் மனவேதனை, மன உளைச்சல் அடைந்து வருகிறேன். காருடன் பயணித்த என் கணவருக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று பயப்படுகிறேன். எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காருடன் மாயமான கல்லூரி பேராசிரியர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.