போதிய வருமானம் இல்லாததால் செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்
போதிய வருமானம் இல்லாததால் செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர் குறித்து போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் அருகே உடையாப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருட்டு போனது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவர்களுடைய செல்போன்களை திருடியதாக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 செல்போன்கள் மீட்கப்பட்டன. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
செல்போன்கள் திருடியதாக கைதாகி உள்ள கார்த்திகேயன் பி.டெக். முடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் உள்ள 2 தனியார் கல்லூரிகளில் ஒப்பந்த முறையில் பேராசிரியராக வேலை பார்த்துள்ளார். தற்போது அவர் பேன்சி ஸ்டோர் மற்றும் செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் சம்பவத்தன்று அந்த தனியார் கல்லூரிக்கு வேலை பார்ப்பவர் போல் சென்றார். பின்னர் ஆட்கள் யாரும் இல்லாத வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்களுடைய செல்போன்களை திருடி உள்ளார். இவர் மீது ஏற்கனவே திருச்செங்கோடு, வேலாயுதபாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு செல்போன் திருட்டு வழக்கு பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.