காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
நெமிலி அருகே காட்டுப்பன்றிக்கு அமைத்த மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார். அதை தொடர்ந்து நில உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவிழா பார்க்க சென்றார்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அசநெல்லிக்குப்பம் கிராமத்தில் திருவிழா நடந்துள்ளது. திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
திருவிழா முடிந்ததும் இயற்கை உபாதையை கழித்துவிட்டு கால் கழுவுவதற்காக அருகில் உள்ள நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது அசநெல்லிக் குப்பத்தைச் சேர்ந்த வரதன் என்பவர் காட்டு பன்றிகளிடமிருந்து நெற்பயிரை பாதுகாக்கும் வகையில் மின்வேலி அமைத்துள்ளார்.
மின்வேலியில் சிக்கி பலி
இந்த வேலியில் சிக்கி விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரிஸ் யாதவ் விசாரணை மேற்கொண்டார். மேலும் நிலத்தின் உரிமையாளர் வரதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.