செல்பி எடுத்தபோது பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி


செல்பி எடுத்தபோது பாலத்தில் இருந்து ஆற்றில் தவறி விழுந்த கல்லூரி மாணவி
x

நெல்லை கொக்கிரகுளம் பாலத்தில் ‘செல்பி’ எடுத்தபின் கல்லூரி மாணவி தவறி தாமிரபரணி ஆற்றில் விழுந்தார். அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் புதிய பாலத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அவர்கள் தங்களின் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அந்த மாணவி பாலத்தில் இருந்து தவறி தாமிரபரணி ஆற்றில் விழுந்தார். இதுகுறித்து உடனடியாக நெல்லை சந்திப்பு போலீசுக்கும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மாணவியை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் வந்து, மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, 'கல்லூரி மாணவி பாலத்தில் இருந்து கீழே எட்டிப்பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்துள்ளார்' என்றனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story