சங்ககிரி அருகே5 நாட்களில் காதல் கணவரை உதறி தள்ளிய கல்லூரி மாணவிபடிக்க விரும்புவதால் பெற்றோருடன் செல்வதாக போலீசாரிடம் உறுதி
சங்ககிரி
சங்ககிரி அருகே திருமணமான 5 நாட்களில் காதல் கணவரை உதறி தள்ளிவிட்டு படிக்க விரும்புவதால் பெற்றோருடன் செல்வதாக கல்லூரி மாணவி போலீசாரிடம் உறுதியுடன் தெரிவித்தார்.
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா கோணசமுத்திரம் அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 23). எம்.எஸ்சி. பட்டதாரி. இவரும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இளம்பெண் எடப்பாடி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களின் காதலக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 22-ந் தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் சில நாட்கள் அங்கு தங்கி இருந்தனர். இதனை தொடர்ந்து காதல் தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கல்லூரி மாணவி தனது காதல் கணவருடன் செல்வதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவியை காதல் கணவருடன் நேற்று முன்தினம் அனுப்பி வைத்தனர். இதையடுத்து கிருஷ்ணகுமார் மனைவியை காரில் நாமக்கல்லுக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றதாக தெரிகிறது.
அப்போது சங்ககிரியில் திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது காரை மாணவியின் தந்தை வழிமறித்தார். பின்னர் மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் 4 பேர் சேர்ந்து மாணவியை தாங்கள் வந்த காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
கடத்தவில்லை
இதற்கிடையே தனது மனைவியை அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றுவிட்டதாக சங்ககிரி போலீசில் கிருஷ்ணகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவி சங்ககிரி போலீஸ் நிலையத்துக்கு தனது பெற்றோருடன் சென்றார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் தன்னை யாரும் ்கடத்தவில்லை என்றும், கல்லூரி படிப்பை தொடர விரும்புவதால் பெற்றோருடன் செல்வதாக உறுதியுடன் கூறினார். அதன்பேரில் போலீசார் அந்த கல்லூரி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
திருமணமான 5 நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு படிக்க விரும்புவதாக பெற்றோருடன் கல்லூரி மாணவி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.