மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய கல்லூரி மாணவி


மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே கல்லூரி மாணவி மணக்கோலத்தில் செமஸ்டர் தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள எத்திலப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மகள் உமா மகேஸ்வரி. இவர் கீழஈரால் கிராமத்தில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் உமா மகேஸ்வரியும், அதே கிராமத்தை சேர்ந்த அவருடைய உறவினரான சுந்தரவேல் ராமமூர்த்தி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று உறவினர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தது.

இதற்கிடையே. உமா மகேஸ்வரிக்கு நேற்று செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளதை அறிந்த காதல் கணவர் சுந்தரவேல் ராமமூர்த்தி அவரை தேர்வு எழுத வைக்க முடிவு செய்தார். திருமணம் முடிந்ததும் பிற சடங்குகள் எதையும் செய்யாமல் உடனடியாக தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அங்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் என அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் உமா மகேஸ்வரி தேர்வு அறைக்கு சென்றார். அங்கு மணக்கோலத்தில் தேர்வு எழுதினார். தேர்வு முடியும் வரை சுந்தரவேல் ராமமூர்த்தி கல்லூரி வளாகத்திலேயே காத்திருந்தார்.

காதல் கைகூடி திருமணமும் முடிந்த மகிழ்ச்சியில், தனது காதல் மனைவியின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக மணக்கோலத்தில் அவரை தேர்வு எழுத கணவர் அழைத்து சென்ற சம்பவம் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story