ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் பயன்பாட்டுக்கு வந்தது
ஊட்டியில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 9 கோர்ட்டுகள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
ஊட்டி,
ஊட்டியில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 9 கோர்ட்டுகள் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட கோர்ட்டு கட்டிடங்கள் உள்ளன. மேலும் சில நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.
இந்தநிலையில் பழங்கால கட்டிடத்தில் இயங்கி வருவதாலும், போதுமான இடம் இல்லாததாலும், நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதை நிறுத்தும் வகையிலும் ஊட்டி பிங்கர்போஸ்ட் அடுத்த காக்காதோப்பு பகுதியில் ரூ.37.79 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
3½ ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், விரைவு மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்பட 9 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. மேலும் இங்கு நூலகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பயன்பாட்டுக்கு வந்தது
கடந்த ஜூன் மாதம் நடந்த திறப்பு விழாவில் முன்னாள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி முருகன் நிருபர்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 9 நீதிமன்றங்கள் இன்று (நேற்று) முதல் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது.
இனிமேல் வழக்கு விசாரணை இங்குதான் நடைபெறும். ஒரு நாளைக்கு கோர்ட்டுக்கு 5 முறை அரசு பஸ் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி சரி செய்யப்பட்டு விட்டது. சாலை வசதி விரைவில் சரிசெய்யப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றார். மேலும் கோர்ட்டு திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.