18 பேர் கொண்ட குழு அமைத்து பணியாற்ற வேண்டும்
பாராளுமன்ற தேர்தலையொட்டி 18 பேர் கொண்ட குழு அமைத்து பணியாற்ற வேண்டும் என அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கந்தநேரியில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், பாபுஜி, ராகவன், நகர செயலாளர் கோவிந்தராஜ் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 106-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலையொட்டி நாம் இன்றிலிருந்தே களப்பணி ஆற்ற வேண்டும். அதற்காக நிர்வாகிகள் 7 பேர், மகளிர் அணியைச் சேர்ந்த 3 பேர், இளைஞர், இளம்பெண்களை பாசறையை சேர்ந்த 4 பேர், தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 2பேர், பேரவையிலிருந்து 2 பேர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் 4 பேர் என 18 பேர் கொண்ட குழு அமைத்து, பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.
இந்த கமிட்டியில் உள்ளவர்கள் வீடு வீடாகச் சென்று தற்போது நடந்து வரும் தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துக் கூறி பாராளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய இப்பொழுதில் இருந்தே உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஹேமந்த் நன்றி கூறினார்.