பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு குழு அமைக்க வேண்டும்
மன்னார்குடியில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடியில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
பருவம் தவறிய மழை
கோடை காலத்தில் பருவம் தவறிய மழை பெய்ததால் திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி பயிர்களான பருத்தி, எள், நிலக்கடலை ஆகியவை பெரும் அளவு பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பயிர் சேத மதிப்பீட்டை கணக்கெடுக்க திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் மன்னார்குடி வட்டாரத்தில் இந்த பணிக்கு குழு அமைக்கப்படாமல் உள்ளது என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பாமணி, கர்ணாவூர், தென்கோவனூர், அரசூர், சவளக்காரன், வேட்டை திடல் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, உள்ளிக்கோட்டை, சுந்தரக்கோட்டை, மகாதேவபட்டினம், திருப்பாலக்குடி, மூவாநல்லூர், நெடுவாக்கோட்டை, காரிக்கோட்டை, மேலவாசல், பைங்காநாடு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் பெருமளவு விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் எள் மற்றும் நிலக்கடை பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
உற்பத்தி இழப்பு
தற்போது பருவம் தவறி பெய்த கோடை மழையினால் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பூச்சிகளாலும், நோய்களாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் உற்பத்தி இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பதற்கான குழு மன்னார்குடி வட்டாரத்தில் அமைக்கப்படாதது விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கணக்கெடுப்பு பணியில் மன்னார்குடி வட்டாரம் புறக்கணிக்கப்படுவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக பயிர் சேத மதிப்பீடு கணக்கிடுவதற்கு மன்னார்குடி வட்டாரத்தில் குழு அமைத்து சேதம் மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிய நிவாரணம்...
இதுகுறித்து மன்னார்குடி ஒன்றியம் வேட்டைத்திடலை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சிதம்பரம் கூறியதாவது:- எங்களது கிராமத்தில் சுமார் 75 எக்டேர் பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கர் பருத்தி சாகுபடி செய்வதற்கு ரூ.35 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.
பருவம் தவறிய மழை காரணமாக பருத்தி செடியில் வாடல் நோய் ஏற்பட்டும், பூக்கள் கொட்டியும், பல்வேறு பூச்சி மற்றும் நோய்களால் விவசாயிகளுக்கு மிகுந்த உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மன்னார்குடி மற்றும் கோட்டூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு பருவம் தவறிய மழையினால் ஏற்பட்ட சேத மதிப்பீட்டை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.