பாலியல் வன்கொடுமைகளை தடுக்க குழு அமைக்க வேண்டும்
குமரியில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்:
குமரியில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் பி.என். ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளக குழு
குமரி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் இடங்களான அனைத்து அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் (மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஜவுளிக் கடைகள்) தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக உள்ளக குழு அமைக்க வேண்டும்.
இந்த குழுவானது 4 உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் பாதிபேர் பெண்களாகவும், இதன் அலுவல் காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியதாகவும் அமைக்க வேண்டும். இவ்வாறு குழு அமைக்க தவறினால் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதத்துக்காக ரூ.50,000 வரை அபதாரம் விதிக்கப்படும்.
புகார் பெட்டி
உள்ளக குழுவானது பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணைக்கு துணை புரிய வேண்டும். பெண்களுக்கு தங்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்படும் நிலையில் இந்த குழு மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறுவதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ, அதன் தொலைபேசி எண்ணான 04652-278404 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.