திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சமுதாய கழிவறை


திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சமுதாய கழிவறை
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கண்ணபுரத்தில் சமுதாய கழிவறை திறக்கப்படுமா? என பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரத்தில் சமுதாய கழிவறை திறக்கப்படுமா? என

பக்தர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சமுதாய கழிவறை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் 108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

இந்த ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி தமிழக அரசால் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கழிவறையும் அதன் அருகில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மூலம் போர்வெல் அமைக்கப்பட்டது.

பக்தர்கள் அவதி

சமுதாய கழிவறை கட்டுமான பணிகள் முழுவதும் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு முடிவடைந்தது. பணிகள் முடிந்து 1 ஆண்டு முடிந்தும், இதுவரை சமுதாய கழிவறை மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படாமல் பூட்டிக்கிடக்கிறது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

திறக்க வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் சமுதாய கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story