பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்
சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ஏலம் விடப்பட்டது
தக்கலை குமாரகோவிலைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் வில்லுக்குறியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் நகைக்கடன் எடுத்திருந்தார். அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக நிதிநிறுவனத்தினரை தொடர்பு கொண்டபோது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் மற்றும் வட்டியை செலுத்தி நகைகளை திருப்பிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர்.
ஆனால் நுகர்வோருக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் அடகு வைத்த நகைகளை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக தெரிய வந்துள்ளது. உடனே கிருஷ்ணகுமார் நகையை திருப்ப எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமென கணக்கு விவரம் தருமாறு நேரில் சென்று கேட்டுள்ளார். ஆனால் அவரை அலைக்கழித்ததுடன் கணக்கு விவரத்தை கொடுக்கவில்லை. அதோடு எந்த விதமான தகவலோ அல்லது பத்திரிகை விளம்பரமோ செய்யாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.5 லட்சம் நஷ்டஈடு
இது ஒரு சேவை குறைபாடு என்பதால் அவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்டஈடு ரூ.5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் அடகு தொகையை பெற்றுக் கொண்டு நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.