விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு நாளை வருகையையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கைகாட்டி பகுதியில் தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தி.மு.க. சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விழா முன்னெற்பாடு பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிப்படை வசதிகள்
கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இது தவிர மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். எனவே அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறை பணிகளை விரைந்து முடித்து, நிகழ்ச்சிப்பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். உலகங்காத்தான் பகுதியில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், பயனாளிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் வசதிகள் அமைத்தல், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அதிகாரிகள் முறையாக செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் பவித்ரா, யோகஜோதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.