குத்தம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தலைமையில் நடந்தது
குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.
சென்னை,
சென்னை சி.எம்.டி.ஏ. அலுவலக கூட்டரங்கில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சி.எம்.டி.ஏ. தலைவரும், அமைச்சருமான சேகர்பாபு தலைமை தாங்கினார்.
குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும் மற்றும் பஸ் நிலையத்தின் இதர பணிகளான மழைநீர் வடிகால் அமைப்பு, பஸ் நிலையம் முழுவதும் குளிரூட்டப்படும் பணிகள் குறித்தும், சென்னை-பெங்களுரு நெடுஞ்சாலையிலிருந்து பஸ் நிலையத்துக்கு செல்லும் அணுகு சாலை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பஸ் நிறுத்தம்
இந்த பஸ் நிலையத்தில் மாநகர பஸ்கள் நிறுத்தம், புறநகர் பஸ்கள் நிறுத்தம், பஸ்களை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பஸ்கள் நிறுத்தம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கடைகள் மற்றும் கழிவறைகள் போன்ற வசதிகள் அமைக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தினை நவீனமயமாக்கும் பணிகள் தொடர்பாகவும், தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.