கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்


கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 30 March 2023 6:45 PM GMT (Updated: 30 March 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்த வேண்டும். உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் அச்சிடப்பட்ட செய்திதாள்களில் உணவு பண்டங்கள் வழங்கப்படுவதை ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும். தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களுக்கு பெயர் பலகை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்ல அரசு குளிர்சாதனப்பேருந்தை இயக்க வேண்டும். சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் விதமாக 10 லட்சம் மரக்கன்றுகள் மாவட்டம் முழுவதும் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சிறுவங்கூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோாிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார்.

மேலும் நுகர்வோர்களுக்கு சரியான முறையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மீனா அருள், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் முனீஸ்வரன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story