150 அடி பள்ளத்தில் பாய்ந்த கன்டெய்னர் லாரி
வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைப்பாதையில் 150 அடி பள்ளத்தில் கன்டெய்னர் லாரி பாய்ந்தது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் விக்னேஷ் பாண்டி (வயது 26). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தில் கன்டெய்னர் லாரி டிரைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று இவர், தனது கன்டெய்னர் லாரியில் சாக்லேட் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொடைக்கானல் நோக்கி புறப்பட்டார்.
லாரியில் அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவகுரு (22), தினேஷ்குமார் (25), பாண்டி (27) ஆகியோரும் பயணம் செய்தனர். கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் வாழைகிரி அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.
4 பேர் படுகாயம்
லாரியை கட்டுக்குள் கொண்டுவர விக்னேஷ் பாண்டி போராடினார். ஆனால் அதற்குள் மலைப்பாதையோரத்தில் இருந்த 150 அடி கிடு, கிடு பள்ளத்தில் கன்டெய்னர் லாரி பாய்ந்தது. மேலும் பாய்ந்த வேகத்தில் பள்ளத்தில் உருண்ட லாரி அங்குள்ள ஒரு மரத்தில் மோதி நின்றது.
லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய விக்னேஷ் பாண்டி உள்பட 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் மற்றும் தாண்டிக்குடி போலீசார் விரைந்து சென்று படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----