வயலுக்குள் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
வயலுக்குள் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
ஆரல்வாய்மொழி:
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு கால்நடை தீவனங்கள் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை பாலகிருஷ்ணன் (வயது42) என்பவர் ஓட்டினார். அந்த லாரி வெள்ளமடத்தை அடுத்து நாக்கால்மடம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதாமல் இருக்க டிரைவர் பிரேக்கை பிடித்தார். இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் சாலையோரத்தில் இருந்த வயலில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் அடிபகுதியில் டிரைவர் பாலகிருஷ்ணன் சிக்கி கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகப்பிரியா மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று டிரைவரை மீட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் லேசான காயத்துடன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.