வெட்டப்பட்ட மரத்தின் மேல் சமையல் கூட கட்டிடம்


வெட்டப்பட்ட மரத்தின் மேல் சமையல் கூட கட்டிடம்
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

வெள்ளேரிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வெட்டப்பட்ட மரத்தின் மேல் சமையல் கூட கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே வெட்டப்பட்ட மரம் மீண்டும் துளிர்விட்டு வளர்ந்து வருவதால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் காணையை அடுத்த வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் சமையற்கூடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக பள்ளி வளாகத்திலிருந்த ஒரு மரத்தை வெட்டிவிட்டு அதே பகுதியில் சமையற்கூடம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது அப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

ஆனால் சமையற் கூடத்திற்காக தரைத்தளத்தில் கான்கிரீட் பெல்ட்டு அமைக்கும்போது பணியாளர்கள் அங்கு வெட்டப்பட்ட மரத்தை முழுவதுமாக அகற்றாமல் கான்கிரீட் பெல்ட் அமைத்துள்ளனர். தற்போது வெட்டப்பட்ட மரமானது மீண்டும் துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. அது மேலும் பெரிய அளவில் வளரும் பட்சத்தில் கான்கிரீட் பெல்ட் சில மாதங்களில் விரிசல்கள் ஏற்பட்டு உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிர்ச்சி

மரத்தை வெட்டி விட்டு அதன் அடிப்பகுதியை அகற்றாமல் அப்படியே கட்டிடம் அமைத்திருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பள்ளி வளாகம் என்பதால் சமையற்கூடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்னரே மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story