சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலி
சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் பலியானார்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சென்னங்காரணி ஊராட்சியில் வசித்து வந்தவர் அருண்பாண்டி (வயது 24). இவர் சென்னங்காரணி ஊராட்சி மன்ற 6-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும் தெரிகிறது.
இவர் கடந்த 13-ந் தேதி திருநின்றவூருக்கு தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு திருமணம் முடிந்து நேற்று முன்தினம் இரவு தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
திருநின்றவூர்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள வடமதுரை ஊராட்சியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் பலி
இதனால் பதறிய அவர் உடனே பிரேக் பிடித்தார். இதில் நிலைத்தடுமாறிய மோட்டார்சைக்கிள் சாலையில் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அருண்பாண்டி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.