பல்லடம் கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளிகழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
பல்லடம் கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
பல்லடம்,
திருட்டு வழக்கில் தண்டனை கிடைத்து விடுமோ என்ற அச்சத்தில் பல்லடம் கோர்ட்டு வளாகத்தில் தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவருடைய மனைவியும் பிளேடால் கையை கீறிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருட்டு வழக்கு
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி (வயது 29). இவருடைய மனைவி மஞ்சுளா. இ்ந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) பணிக்கம்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டன்பாளைத்தில் உள்ள காற்றாலை நிறுவனத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் கருப்பசாமி சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் மீதான திருட்டு வழக்கு பல்லடம் கோர்ட்டில் நடந்து வந்தது. ஆனால் ஜாமீனில் வந்த கருப்பசாமி தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
தற்கொலைக்கு முயற்சி
இதனால் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கருப்பசாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது கருப்பசாமி கோர்ட்டு வளாகத்தில் கிடந்த சிறிய கத்தி போன்ற ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் கழுத்து பகுதியில் ரத்தம் வெளியேறியது. இதனை கண்ட போலீசார் கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிளேடால் கீறினார்
இதற்கிடையே கணவர் தற்கொலைக்கு முயன்றதை கண்ட அவரது மனைவி மஞ்சுளாவும் கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் கருப்பசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருட்டு வழக்கில் தண்டனை கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் கருப்பசாமி கோர்ட்டு வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பல்லடம் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.