சாவிலும் இணை பிரியாத தம்பதி
வீரவநல்லூரில் சாவிலும் இணை பிரியாமல் தம்பதி இறந்தனர்.
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 2-வது வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமையா என்ற சேது (வயது 90). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி மாலையம்மாள் (85). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் ராமையா-மாலையம்மாள் தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இவர்களது வீடு நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. எனவே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தபோது ராமையா, மாலையம்மாள் தம்பதியர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்ைட ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதுமையின் காரணமாக தம்பதியர் ஒரே நாளில் அடுத்தடுத்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலையில் தம்பதியரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களது உடல்கள் வீரவநல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் அருகருகே தகனம் செய்யப்பட்டது.