கழிவுநீர் கால்வாயில் விழுந்த மாடு
நேற்று மாலை கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் எதிரே உள்ள ஒரு மூடப்படாத கழிவுநீர் கால்வாய்க்குள் பசுமாடு ஒன்று திடீரென தவறி விழுந்தது.
கொடைக்கானல் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு கொடுத்தது. இருப்பினும் மாடுகளின் உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. நாளுக்குநாள் சாலைகளில் உலா வருகிற மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மாலை கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் எதிரே உள்ள ஒரு மூடப்படாத கழிவுநீர் கால்வாய்க்குள் பசுமாடு ஒன்று திடீரென தவறி விழுந்து விட்டது.
அந்த கால்வாயில் இருந்து மாடு எழுந்திருக்க முடியாமல் தவித்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் ½ மணி நேரம் போராடி அந்த மாட்டை மீட்டனர். லேசான காயத்துடன் அந்த மாடு மீண்டும் அந்த தெருவிலேயே சுற்றித்திரிந்தது. எனவே கொடைக்கானல் நகர்ப்பகுதியில் திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகர் பகுதியில் திறந்தநிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை மூட வேண்டும் என்று கொடைக்கானல் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.