காளைவிடும் விழாவில் ரெயிலில் சிக்கி மாடு பலி
கே.வி.குப்பம் அருகே காளை விடும் திருவிழாவில் ரெயிலில் சிக்கி மாடு பரிதாபமாக இறந்தது.
கே.வி.குப்பம் அருகே காளை விடும் திருவிழாவில் ரெயிலில் சிக்கி மாடு பரிதாபமாக இறந்தது.
காளை விடும் திருவிழா
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள இ.பி.காலனியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 79-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடைபெற்றது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், கே.வி.குப்பம் தாசில்தார் அ.கீதா, மண்டல துணை தாசில்தார் ப.சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ஜெயபால், உள்ளாட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, பங்கேற்க வந்திருந்த 240 மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றன. இதில் 5 மாடுகள் நிராகரிக்கப்பட்டன. பின்னர் 235 காளைகள் சீறிப்பாய்ந்தன.
ரெயிலில் சிக்கி மாடு பலி
இதில் ஓடுபாதையின் குறுக்கே நின்ற 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 மாடுகளுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் வழிதவறி ஓடிய பசுமாத்தூர் தினேஷ் என்பவரின் காளை காட்பாடியில் இருந்து பெங்களூரு சென்ற ெரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானது. வேகமாக ஓடி வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் 70 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் தடுப்பு கம்புகள் சில இடங்களில் முறையாக அமைக்கப்படாததால் அவற்றில் மாடுகள் சிக்கி காயம் ஏற்பட்டது. மேலும் விழா குழுவினருக்கும், மாட்டு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை போலீசார் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.