குளத்தில் மேய்ந்தபோது சகதியில் சிக்கிய பசு
கொட்டாரம் அருகே குளத்தில் மேய்ந்த பசு சகதியில் சிக்கியது. கடும் போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே குளத்தில் மேய்ந்த பசு சகதியில் சிக்கியது. கடும் போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சகதியில் சிக்கிய மாடு
கொட்டாரம் அருகே நாடான்குளம் பகுதியில் பன்னிகுண்டு குளம் உள்ளது. இந்த குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருக்கின்றது. அதே சமயத்தில் சேறும், சகதியுமாக சில இடங்கள் காட்சி அளிக்கின்றது.
இங்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக செல்வது வழக்கம். அதன்படி நேற்று குளத்தில் பரமார்த்தலிங்க புரத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் பசு மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாடு சகதியில் சிக்கி கொண்டது. அந்த மாடு எவ்வளவோ போராடியும் வெளியே வரமுடியாமல் தவித்தது.
போராடி மீட்பு
இதற்கிடையே முத்துசாமி மாட்டை தேடி அங்கு வந்தார். அந்த சமயத்தில் மாடு சகதியில் சிக்கியருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மீட்க முயன்றார். ஆனால் அவராலும் முடியவில்லை. அதன்பிறகு கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் பெனட் தம்பி, சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சகதியில் சிக்கிய பசுமாட்டை கயிறு கட்டி பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சகதியில் சிக்கிய மாடு மீட்கப்பட்டது.