தொடர் மழையால் நிரம்பி வழியும் பழனி வரதமாநதி அணை


தொடர் மழையால் நிரம்பி வழியும் பழனி வரதமாநதி அணை
x

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, பழனி வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, பழனி வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.

வரதமாநதி அணை

பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர், பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும்.

கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்ததையடுத்து பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக பழனி வரதமாநதி அணை தனது முழு கொள்ளளவான 66.47 அடியை எட்டி நிரம்பியது.

எழில்கொஞ்சும் காட்சி

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் கனமழை பெய்தது. இதனால் பழனி பகுதி அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி வரதமாநதி அணை மீண்டும் நிரம்பி வழிகிறது.

வெள்ளியை உருக்கிவிட்டதை போல அணையில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது. காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் இக்காட்சி அமைந்துள்ளது.

கண்களை கொள்ளை கொள்ளும் வகையில், அணையில் இருந்து தண்ணீர் வழிந்தோடும் எழில்கொஞ்சும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

நேற்றைய நிலவரப்படி வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 106 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர், அப்படியே அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் 65 அடி உயரம் கொண்ட பாலாறு-பொருந்தலாறு அணையில் 53.35 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 334 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 24 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

79 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணையில் 68.94 அடி தண்ணீர் உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 31 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 11 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பழனி பகுதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே வாரவிடுமுறை நாட்களில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அணைகளை பார்வையிட வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story