மகாராஜபுரத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மகாராஜபுரத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

திருவாரூர்

திருமக்கோட்டை:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக மகாராஜபுரத்தில் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

திருமக்கோட்டைஅருகே மகாராஜபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜாபுயலில் இந்த பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்தது. இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் மாணவர்களின் நலன்கருதி அதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இடித்து அகற்றம்

பழைய கட்டிடம் சேதமடைந்து இருந்ததால் அதை அகற்ற வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளிவந்தது.இதன் எதிரொலியாக திருமக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா ஜெயசீலன் உத்தரவின் பேரில் பழைய பள்ளி கட்டிடம் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கும், செய்தி வெளியிட்டு 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story