இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நடைபாலம்


இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நடைபாலம்
x

கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான நடைபாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான நடைபாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள அகரப்பொதக்குடியில், வெள்ளையாற்றின் குறுக்கே பொதக்குடிக்கும், அகரப்பொதக்குடிக்குமான இணைப்பு நடைபாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த பாலத்தை அகரப்பொதக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, கண்கொடுத்தவனிதம், பொதக்குடி, புதுக்குடி, பூதமங்கலம், கீழகண்ணுச்சாங்குடி, காவாலக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

10 ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நடைபாலம் சேதமடைந்தது காணப்படுகிறது. பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் மற்றும் பாலத்தின் முகப்பு, நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் சேதமடைந்து பாலத்தை விட்டு விலகி உள்ளது.

மேலும் பாலத்தின் நடுப்பகுதியில் உள்வாங்கி அந்தரத்தில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் ஆற்றில் செல்லும் தண்ணீரில் மூழ்கும் நிலையில் உள்ளது.

பொதுமக்கள் அச்சம்

எந்த நேரத்திலும் பாலம் ஆற்றில் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் பொதுமக்கள் சென்று வருகின்றனர். வேறு வழியில்லாமல் மிகுந்த அச்சத்துடன் அப்பகுதி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

பாலத்தின் உறுதித்தன்மை இழந்து ஆபத்தான நிலையில் உள்ள நடைப்பாலத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதிதாக கட்ட வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அகரபொதக்குடியை சேர்ந்த மணியம்மாள் கூறுகையில், இந்த நடைபாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

ஆற்றின் அகலமும், பாலத்தின் நீளமும் அதிகமாக உள்ளதால், நடு மையத்தில் பாலம் உள்வாங்கி உள்ளது. ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றால் பாலம் அடித்துகொண்டு செல்லும் அபாயம் உள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த பாலத்தில் நடந்துசெல்லவே அச்சமாக உள்ளது. இந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.

அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து கூறுகையில், பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அவசர தேவைகளுக்கு கூட உடனடியாக செல்ல முடியவில்லை. இதனால், மிகவும் சிரமமாக உள்ளது. பாலம் சேதமடைந்துள்ளதால் அதிக அளவில் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story