சாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளம்


சாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும்  ஆபத்தான பள்ளம்
x

சாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளம்

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே சாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பு சுவர் இடிந்தது

கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள நாகங்குடியில் பாசன வாய்க்கால் செல்கிறது. இதனால் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை பாசன வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு கொண்டு செல்லும் வகையில் சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு, மேல்பகுதியில் தரைபாலம் கட்டப்பட்டு 2 பக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. பாலத்தின் ஒரு பக்கம் உள்ள தடுப்பு சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் அந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மணல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட தடுப்பு மற்றும் மணல் மூட்டைகளும் சரிந்து விழுந்து தற்போது பெரிய அளவில் பள்ளம் காணப்படுகிறது. மேலும் சாலையிலும் சற்று சரிவு ஏற்பட்டு காணப்படுகிறது. பள்ளம் ஏற்பட்ட இடம் மிகவும் ஆபத்தான வளைவு என்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும்

கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கொரடாச்சேரி, குடவாசல், நாச்சியார்கோவில், நாகப்பட்டினம், கோட்டூர், மாவூர் போன்ற முக்கிய ஊர்களுக்கு சென்று வருவதற்கான வழித்தடம் என்பதால் தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும். மேலும் சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு, புதிய தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Related Tags :
Next Story