தடுப்புச்சுவர் இல்லாத அபாய சாலை
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விரிவாக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் படையெடுத்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.35 கோடியும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.27 கோடியும் ஒதுக்கப்பட்டு விரிவாக்க பணிகள் தற்போது 80 சதவீதம் நடந்து உள்ளது. இந்த பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்து அபாயம்
இந்தநிலையில் மண் சரிவு அபாயம் உள்ள மரப்பாலம், மந்தாடா பகுதியில் கேபியன் வால் எனப்படும் கற்கள், துருப்பிடிக்காத வலைக்கம்பிகளை கொண்டு கட்டப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் அதிகம் வரக்கூடிய மரப்பாலம் பகுதியில் கேபியன் தொழில்நுட்பத்துடன் சுவர் எழுப்பி உள்ள இடத்திற்கு அருகில் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
மரப்பாலம் பகுதியில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி உள்ள இடத்திற்கு எதிரில் 100 அடி பள்ளம் உள்ளது. வளைவில் அந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்படாமல், மண் கொட்டப்பட்டு உள்ளது.
இந்த வழியாக் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். அவர்களுக்கு அந்த இடம் குறித்து தெரியாததால், அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் 100 அடி பள்ளத்தில் வாகனங்கள் கவிழும் அபாயம் உள்ளது. மேலும் எதிரில் சரக்கு வாகனங்கள் வரும்போது வழிவிட சிரமமாக உள்ளது. எனவே, கோடை சீசன் தொடங்கும் முன் அந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.