நிழல் இல்லாத நாள்


நிழல் இல்லாத நாள்
x

நிழல் இல்லாத நாள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு தோன்றும் விதம், காரணம், இதன் முக்கியத்துவம் குறித்து நேற்று விளக்கமளிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துகுமார் கூறியதாவது:- எப்போதும் நம்மைப் பின் தொடர்வது நம் நிழல்கள், இதுபோன்று வருடத்திற்கு 2 முறை மட்டும் ஒரு சில மணித்துளிகளுக்கு நம்மை பின் தொடராது. அந்த நாளை தான் நாம் நிழல் இல்லாத நாள் என்கிறோம். இந்த அறிவியல் நிகழ்வு தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெவ்வேறு நாட்களில் நண்பகல் 12.10 முதல் 12.22 வரையுள்ள வெவ்வேறு நேரங்களில் நிகழும். நேற்று சரியாக நண்பகல் 12.13 மணியளவில் ஏற்பட்ட நிழல் இல்லாத நிகழ்வு பற்றிய செயல்முறைகளை செய்து விளக்கினர். சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது சூரிய ஒளி செங்குத்தாக நம் மீது படும். அப்போது நிழல்கள் நமது கால்களுக்கு அடியில் விழும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு நிழல் தெரியாது. இதுபோன்று நிழல் தெரியாத நாளை நாம் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கிறோம். இந்த நிகழ்வு கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய 2 எல்லைகளுக்கு உட்பட்ட நாடுகளில் உணரப்படும். இதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் சூரியன் மேல்நிலையை அடையாது. சூரியன் ஜுன் மாதம் 21-22 தேதிகளில் கடகரேகையின் மேலே இருக்கும். அதேபோல டிசம்பர் மாதம் 21-22-ம் தேதி மகரரேகையின் மேல் இருக்கும். இந்த 2 நிகழ்வுகளுக்கு முன்னும் ஒரு முறை பூமியில் நிழல் இல்லாத நாள் வரும். அதன்படி நிழல் இல்லாத நாள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இரண்டு முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்கத்தின் சார்பில், நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. இந்த நிகழ்வில் அரசு உயர்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.


Next Story