கஞ்சா வாலிபர்களுக்கு பயந்து கடையை பூட்டிய வியாபாரி 'ரவுடிகளால் கடை காலவரையின்றி மூடப்படுகிறது' என நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு


கஞ்சா வாலிபர்களுக்கு பயந்து கடையை பூட்டிய வியாபாரி ரவுடிகளால் கடை காலவரையின்றி மூடப்படுகிறது என நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு
x

கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது என வியாபாரி ஒருவர் கடையின் ஷட்டரில் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் தக்கோலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை

கஞ்சா வாலிபர் மிரட்டல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கீழ் பஜாரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38) என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக சிமெண்டு மற்றும் கட்டுமானத்திற்கான இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பு கடந்த 11-ந் தேதி கஞ்சா போதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முத்துராமலிங்கம் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்ததும் தகராறில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டது எனது உறவினர்தான். நாங்கள் இருவரும் சமாதானம் ஆகி விட்டோம். எங்கள் மீது புகார் கொடுக்க நீங்கள் யார்? என கேட்டு முத்துராமலிங்கத்தை மிரட்டி சென்றுள்ளார். இதனால் முத்துராமலிங்கம் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

காலவரையின்றி...

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி மீண்டும் அவரது கடை முன்பாக இரண்டு வாலிபர்களும் வந்து கற்களை வீசியும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் தராசு ஆகியவற்றை சேதப்படுத்தியும் முத்துராமலிங்கத்திடம் கடையை திறந்தால் ஒழித்து கட்டுவேன் என மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துராமலிங்கம் மீண்டும் தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன முத்துராமலிங்கம் கடையின் ஷட்டரை மூடி பூட்டி விட்டு, அதன் மீது நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளார். அதில் கஞ்சா போதையில் வரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்படுகிறது என்று எழுதி உள்ளார். இந்த நோட்டீசை கண்ட அந்தப் பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முத்துராமலிங்கத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பரபரப்பு

புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்து, எவ்வித பாதிப்பும் ஏற்படாது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கடையை திறந்து வியாபாரம் செய்யுங்கள் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து முத்துராமலிங்கம் கடையை திறந்தார்.

இந்த சம்பவம் அரக்கோணம், தக்கோலம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story