3 வயதில் தத்து கொடுக்கப்பட்ட நிலையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பெண்


3 வயதில் தத்து கொடுக்கப்பட்ட நிலையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை தேடி அலையும் டென்மார்க் பெண்
x

3 வயதில் தந்து கொடுக்கப்பட்ட பெண், 42 ஆண்டுகளுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து வந்து தனது பெற்றோரை தேடி வருகிறார்.

சேலம்

கருப்பூர்:

3 வயது குழந்தை

டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் பேட்டரிக் (வயது 45). இவரது மனைவி நிஷா (44). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நிஷா கடந்த 1980-ம் ஆண்டு 3 வயது குழந்தையாக இருந்த போது சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப்பட்டுள்ளார். பின்னர் அங்கு இருந்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலா பயணி ராஜ்முஷன், என்பவர் தத்து எடுத்து சென்று டென்மார்க்கில் வளர்ந்துள்ளார்.

இந்த நிலையில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை காண வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதை கணவரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சரி என்று கூறவே, நிஷாவும், அவரது கணவர் பேட்டரிக்கும், டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.

42 ஆண்டுகளுக்கு...

பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி உள்ளார். அவர் விழுப்புரம், தஞ்சை, கும்பகோணம், ஆகிய பகுதிகளில் தேடி அலைந்து விட்டு சேலம் மாவட்டம் கருப்பூருக்கு வந்துள்ளார்.

42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரை, உறவினரை நிஷா, தனது கணவருடன் தேடி வருகிறார். இது குறித்து நிஷா கூறுகையில், 42. ஆண்டுக்கு முன்பு எனது பெயர் மீனாட்சி என்ற ஞாபகம் உள்ளது. பூர்வீகம் கபூர் அல்லது கருப்பூர் என தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேடி வருகிறேன். மேலும் கருப்பூர் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று எனது இளம் வயது ஞாபகங்கள் வருகிறதா? என தேடி உள்ளேன். ஆனால் பல இடங்களில் தேடியும் எனது பெற்றோர், உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் கண்டுபிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து நிஷா, தனது கணவருடன் கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அவர்களிடம் விசாரணை நடத்தினார்.


Next Story