தேய்ந்து போன செருப்பு தைக்கும் தொழில்; தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கு வழி பிறக்குமா?
செருப்பு தைக்கும் தொழில் தேய்ந்து போனதால், மறுவாழ்வுக்கு வழி பிறக்குமா? என தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்
கல்லும், முள்ளும் காலை பதம் பாக்காமலும், ஆணி போன்ற கூர்மையான பொருட்கள் குத்தாமலும் நம்மை பாதுகாப்பதற்கு கேடயம் போல் இருப்பது செருப்பு.
புதிய டிசைன் செருப்புகள்
'ஆள் பாதி, ஆடை பாதி' என்று ெசால்வார்கள். ஒருவரது தோற்றத்தை அழகாக காட்டுவதில் ஆடைகளுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. தற்போது அந்த வரிசையில் ஆடைகளின் வண்ணத்துக்கு ஏற்ப விதவிதமான டிசைன்களில் அணியும் செருப்புகளும் முக்கிய இடத்தை பிடித்துவிட்டது என்றே கூறலாம். இதனால் பாதுகாப்புக்கு என்று கருதப்பட்ட செருப்பு இன்று பேஷன் போல் பார்க்கப்படுகிறது.
முன்பு தோல் செருப்புகளை பெரும்பாலானோர் பயன்படுத்திய காலத்தில், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அதிகளவில் இருந்தனர். ஆனால், தற்போது கால மாற்றத்தில் செருப்பின் வகைகள், டிசைன்கள் அதிகளவில் வந்து விட்டதால், பெரும்பாலானோர் செருப்பு பிய்ந்ததும் அதை சாலையில் தூக்கி வீசிவிட்டு புதிய டிசைன்களில் செருப்பை வாங்கி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
மறுவாழ்வுக்கு வழிபிறக்குமா?
இதனால் பிய்ந்த செருப்பை தைத்து போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால், செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைந்து விட்டது. அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
நெல்லையில் சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் முன்பு செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் சாலையோரத்தில் அதிகளவில் இருப்பதை பார்க்க முடியும். ஆனால், தற்போது ஒரு சிலரே தென்படுகின்றனர். ஓடாய் தேயும் செருப்பு போல் தங்களது தொழிலும் தேய்ந்து போனதால் தொழிலாளர்கள் தங்களின் மறுவாழ்வுக்கு வழிபிறக்குமா? என்று அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நிழற்கூரை
இதுகுறித்து நெல்லை சந்திப்பில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் திருமால்நகரை சேர்ந்த சுடலைமணி கூறியதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பிளாட்பாரங்களில் 20 செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அமர்ந்து தொழில் செய்து வந்தோம். பின்னர் புறநகர் பஸ்களுக்காக புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. அங்கு தொழிலாளர்கள் இடம்பெயர முயற்சி செய்தபோது அனுமதி கிடைக்கவில்லை. செருப்பு தைக்கும் தொழில் என்பது ஒரு சிறு தொழில் மட்டுமே. அவசரமாக வருபவர்கள் தங்களது செருப்பு பிய்ந்து போகும்போது, அதை கொண்டு வரும் பட்சத்தில் தைத்துக் கொடுத்து அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். சாலையோரங்களில் வெயில், மழை பாராமல் அமர்ந்து வேலை செய்யும் எங்களுக்கு அரசு நிழற்கூரை அமைத்து தர வேண்டும். எங்களது தொழிலை மேம்படுத்தவும், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனைஞ்சிபட்டியை சேர்ந்த சதாம் உசேன்:- எங்களது தோட்ட பகுதிகளில் 10 குதிரைகளை வளர்த்து பராமரித்து வருகிறோம். குதிரையை வண்டியுடன் இணைக்கும் தோல் பட்டையை தைப்பதற்காக தொழிலாளியிடம் எடுத்து வந்தேன். அதை அவர் நன்றாக செய்து தருகிறார். தற்போது சாதாரணமாக ஆண்களின் செருப்பு விலை சராசரியாக ரூ.300 ஆக உள்ளது. ஏழை, எளிய மக்கள் செருப்பு பிய்ந்து விட்டால் உடனே புதிய செருப்பு வாங்காமல், தொழிலாளர்களிடம் ரூ.20 கொடுத்து செருப்பை தைத்து மீண்டும் அணிந்து கொள்கிறார்கள். பெரும்பாலானோர் புதிய செருப்பு வாங்குகிறார்கள்.
வேறு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்
தென்காசி பழைய பரதன் தியேட்டர் அருகில் செருப்பு தைக்கும் கடை நடத்தி வரும் ராஜகோபால்:-
நான் சுமார் 25 ஆண்டுகளாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். நான் வைத்திருக்கும் கடை 1990-ம் ஆண்டில் அரசு எனக்கு வழங்கியது. முன்பு போல இப்போது செருப்பு தைப்பதற்கு பொதுமக்கள் வருவது இல்லை. ரெடிமேடு செருப்புகள் விற்பனைக்கு வருகின்றன. அதில் பழுது ஏற்பட்டால் உடனடியாக அதனை தூக்கிப் போட்டுவிட்டு புதிய செருப்புகள் வாங்கிக் கொள்கின்றனர். மேலும் இப்போது அதிகமான தொழிலாளர்களும் இல்லை. தொழிலாளர்கள் பலரின் வாரிசுகள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். கொரோனா காலத்தில் தொழில் முற்றிலும் நடக்கவில்லை. இப்போது கூட ஒன்றிரண்டு பேர் தான் வருகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம் அன்றைய செலவுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. மழைக்காலங்களில் யாரும் வருவது இல்லை. இவ்வளவு காலத்திற்கு பிறகு வேறு வேலைக்கு செல்ல முடியாது என்பதால், கிைடப்பதை வைத்து காலத்தை போக்குகிறோம்.
தென்காசி அம்மன் சன்னதி பஜாரின் தொடக்கத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் வீரபாகு:-
நான் சுமார் 20 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறேன். முன்புபோல் செருப்பு தைப்பதற்கு ஆட்கள் யாரும் வருவது இல்லை. மிகவும் குறைவானவர்களே வருகிறார்கள். முன்பெல்லாம் தோல் செருப்புகளை விரும்பி வாங்குவார்கள். அதில் பழுது ஏற்பட்டால் எங்களிடம் கொண்டு வருவார்கள். ஆனால் இப்போது பேஷன் செருப்புகள் அதிகமாக வருகின்றன. அவற்றை வாங்குபவர்கள் சிறிது காலம் பயன்படுத்திவிட்டு வேறு செருப்புகளை வாங்கிக் கொள்கின்றனர். எங்களது தொழில் மிகவும் நலிந்து கொண்டே வருகிறது. இதனால் போதிய வருமானம் கிடைக்காத நிலை உள்ளது. எனக்கு அரசின் திட்டத்தில் கடை அமைத்துதர அதிகாரிகளை வேண்டுகிறேன்.
தொழிலை விட்டு சென்று விட்டனர்
தூத்துக்குடியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி மாரியப்பன்:- நான் நீண்டகாலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முன்பு தோல், ரப்பர் போன்றவற்றில் செருப்புகள் வந்தன. தோல் செருப்புகளை பயன்படுத்தும்போது காலில் வெடிப்பு போன்ற பிரச்சினைகள் வராது. நீண்டகாலம் உழைக்கும். பிய்ந்து போனால், அதனை சரிசெய்து மீண்டும் பயன்படுத்த முடியும். தற்போது ரெடிமேடு சட்டை போன்று, ரெடிமேடு செருப்புகள் விதவிதமாக வந்து விட்டன. இதனால் மக்கள் அதனை விரும்ப தொடங்கி விட்டனர். வெளியில் சென்று கொண்டு இருக்கும்போது, செருப்பு பிய்ந்து விட்டால் அதனை தைக்க வருகிறார்கள். பெரும்பாலும் பிய்ந்த செருப்புகளை மீண்டும் உபயோகப்படுத்துவது இல்லை. இதனால் எங்கள் நிலை பரிதாபமாகி விட்டது. நாங்கள் குடும்பத்தை நடத்தவே மிகவும் சிரமப்படுகிறோம். இதனால் பலர் தொழிலை விட்டு சென்று விட்டனர். எனவே, செருப்பு தைக்கும் கடையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான ரெடிமேடு செருப்புகளையும் விற்பனைக்காக வைத்து இருக்கிறோம். இதனால் ஓரளவு வருவாய் கிடைக்கிறது.