இரு தரப்பினரிடையே தகராறு; 4 பேர் கைது
இரு தரப்பினரிடையே தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வளவனூர்,
விழுப்புரம் அருகே உள்ள அற்பிசம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33), விவசாயி. இவர் பக்கமேடு கிராமத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்த நிலத்தின் அருகே நாவப்பன் (51) என்பவருடைய வீடு உள்ளது. இந்நிலையில் ராஜேஷ், தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது நாவப்பனின் மகன் அறிவழகன் (23), அந்த நிலத்தில் இயற்கை உபாதை கழிக்கச்சென்றார். இதைப்பார்த்த ராஜேஷ், அறிவழகனிடம் ஏன் என்னுடைய நிலத்தில் இப்படி செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அறிவழகன், நாவப்பன், அவரது மனைவி நளினி (45) ஆகியோர் சேர்ந்து ராஜேசை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அறிவழகனை ராஜேஷ் தாக்கியுள்ளார். இதுகுறித்து ராஜேஷ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அதேபோல் நளினி அளித்த புகாரின்பேரில் ராஜேசையும் போலீசார் கைது செய்தனர்.