இரு தரப்பினரிடையே தகராறு; ரவுடி உள்ளிட்ட 6 பேர் கைது
இரு தரப்பினரிடையே தகராறு; ரவுடி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்தவர் பாலு மனைவி சரசு (வயது 75). இவர் ஏற்கனவே சாராயம், மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். தற்போது விற்பனை செய்யாமல் திருந்தியுள்ள நிலையில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடியான இருசப்பன் மகன் அப்பு என்ற கலையரசன் (35) மற்றும் கிஷோர் (22), கிளாரிஷ் ஆகியோர், சரசுவிடம் சென்று மதுபாட்டில் தரும்படி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், தான் இப்போது மது பாட்டில் விற்பனை செய்வதில்லை எனக்கூறியுள்ளார்.
அப்படியானால் மதுபாட்டில்கள் வாங்க பணம் தரும்படி கேட்டு சரசுவை அவர்கள் 3 பேரும் திட்டி தாக்கினர். இதை தடுக்க வந்த சரசுவின் மகன் பிரகாஷ் (36), உறவினர் கார்த்திக்ராஜா (23) ஆகியோரையும் அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சரசு, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அப்பு உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்புவை கைது செய்தனர்.
இதேபோல் தோமஸ் மனைவி பிரேமா, போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அந்த புகாரில், தன்னையும், தனது மகன் கிஷோரையும் ஊரல்கரை மேட்டுத்தெருவுக்கு சமாதானம் பேச அழைத்தபோது நாங்கள் இருவரும் அங்கு சென்றோம். அப்போது கார்த்திக்ராஜா, ஜெமினி, சிலம்பரசன், கவுதம், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து தங்களை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.
அதன்பேரில் கார்த்திக்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.