செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்


செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வாய்க்கால்
x

அன்னப்பன்பேட்டை அருகே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

அன்னப்பன்பேட்டை அருகே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெம்புகாவிரி வாய்க்கால்

பாபநாசம் தாலுகா, அன்னப்பன்பேட்டை பகுதியில் ஜெம்புகாவிரி பிரிவு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள 1,800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த வாய்க்காலில் தற்போது செடி, கொடிகள், ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக வயல்களுக்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.

தூர்வார வேண்டும்

கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை மற்றும் பொந்தையாகுளம் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 1,800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.

விவசாய நிலங்களை பாதுகாக்கவும், நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் வருவதற்குள் வாய்க்காலில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story