மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்
காலமநல்லூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
செம்பனார்கோவில் ஒன்றியம் காலமநல்லூர் ஊராட்சியை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலமநல்லூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊர் கடலுக்கு மிக அருகில் உள்ளதால் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. ஊராட்சி மன்றம் சார்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அனைத்து தெருக்களுக்கும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக கடந்த ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு தற்போதுவரை வழங்கப்படவில்லை. மேலும் இது தொடர்பாக செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல முறை தெரிவித்தும், இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.