சாலை மறியலில் ஈடுபட்ட போதை ஆசாமி
நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் ‘நாடு சரியில்லை' என கூறி மதுபோதையில் மறியல் செய்த தொழிலாளி, பொதுமக்களிடமும் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் 'நாடு சரியில்லை' என கூறி மதுபோதையில் மறியல் செய்த தொழிலாளி, பொதுமக்களிடமும் ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போதை ஆசாமி
நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் செம்மாங்குடி ரோடு சந்திப்பு அருகே 45 வயதுடைய தொழிலாளி ஒருவர் நேற்று மதியம் மதுபோதையில் அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தார். பின்னர் திடீரென சாலையின் நடுவே அமர்ந்து வாகனங்களை செல்ல விடாமல் மறியலில் ஈடுபட்டார். போதை ஆசாமியின் இந்த செயலால் அவதியடைந்த வாகன ஓட்டிகள் அவரை சாலையில் இருந்து எழுந்து செல்லும்படி கூறினர். ஆனால் அந்த தொழிலாளி கேட்கவில்லை. மாறாக தன்னை எழுந்து போக சொன்ன ஒருவரிடம் தகராறு செய்தார்.
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, 'நீ யார் என்னை போக சொல்ல. நான் யார் தெரியுமா?' என கேட்டவாறு சாலையில் இருந்து எழுந்தார். தொழிலாளி மதுபோதையில் இருந்ததை அறிந்த அந்த நபர் அங்கிருந்து செல்ல முயன்றார். ஆனால் தொழிலாளி அவரை விடவில்லை. தொடர்ந்து தகாத வார்த்தைகளால் அவரை திட்டினார்.
ஆபாச பேச்சு
பின்னர் போதை தலைக்கேறியதால் செய்வதறியாது வாய்க்கு வந்ததை எல்லாம் அவர் பேசினார். பொதுமக்களிடமும் ரகளையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கைகளால் சட்டையை கிழித்து கொண்டு 'ரோடு சரியில்லை. நாடு சரியில்லை. எல்லாத்தையும் மாற்ற வேண்டும்' என்று கூறி கத்திக் கொண்டிருந்தார். அவர் சட்டையை கிழித்தபோது சட்டை பையில் வைத்திருந்த அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது. போதை கண்ணை மறைத்ததால் செல்போன் கீழே விழுந்தது கூட தெரியாமல் தொடர்ந்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் அங்கு வந்தனர். போலீசை பார்த்ததும் அந்த தொழிலாளிக்கு போதை சற்று இறங்கி விட்டது போல. ஏன் எனில் உடனடியாக அவர் ஆபாசமாக பேசியதை நிறுத்திவிட்டார். பின்னர் மெல்ல மெல்ல அங்கிருந்து நடையை கட்டினார். எனினும் அவரை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அவ்வை சண்முகம் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.