காட்டெருமைக்கு வாழை பழம் கொடுக்க முயன்ற போதை ஆசாமி
காட்டெருமைக்கு வாழை பழம் கொடுக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்
குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. தொழிற்சாலை வளாகத்தில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவை அடிக்கடி தொழிலாளர் குடியிருப்பு வளாகம் மற்றும் குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன. இந்தநிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வங்கி ஏ.டி.எம். அருகே காட்டெருமை புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது போதை ஆசாமி ஒருவர் கையில் வாழை பழத்துடன் நடந்து வந்தார். காட்டெருமையை பார்த்த அவர், அதன் பசியை போக்க வேண்டும் என எண்ணினார். உடனே காட்டெருமை அருகில் சென்று வாழை பழத்தை கொடுக்க முயன்றார். பின்னர் திடீரென காட்டெருமை மிரண்டதோடு, போதை ஆசாமியை தாக்க முயன்றது. உடனே அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே, அந்த ஆசாமி அங்கிருந்து தள்ளாடியபடி தள்ளி சென்றார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.